நாம் சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பலன்களின் மூலம் அறிந்திருப்போம். அந்த வகையில் களைச் செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான் இந்த மூக்கிரட்டை. அது உண்மையில் களைச்செடி அல்ல. நமது உடல் முழுவதையும் புனரமைப்பு செய்யும் ஒரு கீரை.
கொரோனா பேரிடருக்குப் பிறகு, வாசிப்பு பழக்கம் கொண்ட மேல்தட்டு மக்கள் வாழும் நகரங்களில் கூட இந்த மூக்கிரட்டை ஒரு கீரையாக இன்றைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கிராமத்தவர்கள் இதை படிப்படியாக மறந்து கொண்டிருக்கிறார்கள்.
எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, சற்றே மேலெழுந்த வண்ணம், தன் தனித் தன்மையை நிரூபித்து வளரும் ஒரு செடிதான் மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை இனங்கள் இங்கே உண்டு.
சாரணை, வட்டச் சாரணை, சக்திச் சாரணை, வெள்ளைச் சாரணை, மூக்கிரட்டை என்று பல பிரிவுகளை கொண்டது இந்த செடி. இதில் வட்டச்சாரணை என்பது மருத்துவ குணங்கள் குறைவாகவும், மூக்கிரட்டை என்பது மருத்துவ குணங்கள் அதிகமாகவும் கொண்டதாக நமது சித்த மருத்துவம் கூறுகிறது.
மூக்கிரட்டைக்கு ஆயுர்வேதம் வைத்துள்ள பெயர் "புனர்நவா". ஏனெனில் இது கோடைகாலத்தில் தனது இலைகளை காயவைத்து, உதிர்த்து, மண்ணுக்குள் இருக்கும் வேர்களில் மட்டும் கொஞ்சம் நீரைச் சேமித்து வைத்து, உயிர்வாழ்ந்து, பருவகாலம் வந்ததும் அதே வேரில் இருந்து பீனிக்ஸ் பறவையாக மறுபடி வளரும்.
தன்னைத்தானே புனரமைத்து கொள்ளும் மூக்கிரட்டை, மனித உடலையும் புனரமைத்து காக்கிறது. இராஜ உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தை சீர்செய்தும், மாற்றொரு இராஜ உறுப்பான கல்லீரலில் நச்சுத்தன்மையை வெளியேற்றியும் நமக்கு பெரும் சகாயம் செய்கிறது இந்த மூக்கிரட்டை.
மூக்கிரட்டையை ஒருவர் சாப்பிடும்போது வாத வியாதிகள் எல்லாம் அடங்கி வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பு, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் போன்றவற்றை மூக்கிரட்டை குணமாக்குகிறது.
மூக்கிரட்டை, பொன்னாங்கன்னி, மற்றும் கீழாநெல்லி இவற்றின் இலைகளை சம அளவில் எடுத்து, நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை தெளிவாகும்.
பொதுவாக கடைகளில் மூக்கிரட்டை வேர் மட்டும் முழுதாகவோ, அல்லது பொடியாகவோ கிடைக்கிறது. இருப்பினும் மூக்கிரட்டை முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, சமூலமாக, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.
சிறுநீரக பாதிப்புகளின் கடுமையான விளைவுகளால் இரத்தத்தில் நச்சுக்கள் அதிகரிப்பால், சிறுநீரகங்களின் இயக்கம் செயல் இழக்கும் அபாய நிலை ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர, மூக்கிரட்டை வேரை சிறிது எடுத்து ஒரு தம்ளர் நீரில் இட்டு, அதில் சிறிது சோம்பு சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்து, தினமும் பருகி வர, பக்க விளைவுகள் ஏதுமின்றி, பாதிப்புகள் மெல்ல விலகும்.
சிலருக்கு இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால், மலம் இளகி, வயிற்றுப்போக்கு ஏற்படும், இதனால் பாதிப்பில்லை, உடலுக்கு நன்மைதான் உண்டாகும். கால்களில் நீர் சேர்வதை தடுப்பதன் மூலம் மூட்டுவலியை சரி செய்கிறது.
இருப்பினும், இத்தனை நற்பலன்களை கொண்ட இந்த மூக்கிரட்டை கீரையை எதோ முருங்கை கீரையை சமைத்து சாப்பிட்டது போல தனியாக சாப்பிட முடியாது. அரைக்கீரை போன்ற மற்ற கீரையுடன் சேர்த்து கலவை கீரையாகவே சாப்பிடுவது நல்லது. அப்படியே சாப்பிட முடியும்.
Super. Works well for kidney cleaning.
© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services