தற்பொழுது முடவாட்டுக்கால் கிழங்கு, முடவன் கிழங்கு என்ற பெயரில் அதிகமாக சைவ ஆட்டுக்கலாக விற்கப்படும் இந்தக் கிழங்கின் தாவரவியல் பெயர் Drynaria Quercifolia. இந்தக் கிழங்கை பற்றிய குறிப்புகள் பழங்கால சித்த மருத்துவ நூல்களில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை என்றாலும், சமீப நாட்களில் இது பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் அதிகம் வெளிவந்துள்ளன.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த கிழங்கு, தமிழகம் கேரளாவில் தொடங்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேஷியா, மற்றும் ஆஸ்திரேலியா வரை பல நாடுகளில் பரவிக் கிடக்கிறது. மேலும் அந்தந்த பகுதிகளின் பழங்குடிகளும் இதைப் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அரை அடி முதல் ஒரு அடி நீளம் வரை, பழுப்பு நிறத்தில், வெளிப்புறம் ஆட்டில் இருக்கும் ரோமங்களை போன்ற அமைப்புடனும், உள்புறம் பெரும்பாலும் வெள்ளை அல்லது சற்று மஞ்சள் நிறத்துடன் இருக்கும் இந்த நீர்ச்சத்து நிறைந்த இந்தக் கிழங்கு பெரும்பாலும் பாறை இடுக்குகளிலும் மலைகளிலும் வளரக்கூடியது.
நீர்ச்சத்து நிறைந்த கிழங்கு என்பதால், காய காய அதிகம் எடையை இழக்கக்கூடியது. எந்த அளவுக்கு என்றால், நீங்கள் ஒரு கிலோ கிழங்கு வாங்கி வந்தால், ஒரு பதினைந்து நாட்களில் அது வெறும் 50 முதல் 100 கிராமிற்குள் சுருங்கி விடும். அதனால் வாங்கிய உடனே பெரும்பாலும் பயன்படுத்தப்பட வேண்டும்.
இதை நம்மவர்கள் அதிகமாக மூட்டுவலிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் பழங்குடியினர் சளி, வலி, காசநோய், காய்ச்சல், பெருங்கழிச்சல், குழந்தையின்மை, நீரிழிவு, சிபிலிஸ், ஒருபக்க தலைவலி, வீக்கம் போன்ற பல நோய்களை குணப்படுத்த இந்த கிழங்கை பயன்படுத்துகிறார்கள். அதிசயமாக, சீனர்கள் இந்தக்கிழங்கை முடிவளர வைப்பதற்கும், ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கும் பயன்படுத்துகிறார்கள்.
நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மைகளும், சர்க்கரை எதிர்ப்பு வேதிப்பொருள்களும், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு காரணிகளும் இருப்பதால், இந்த முடவாட்டுக்கால் கிழங்கு வைரஸ் பாதிப்புகள், சர்க்கரைநோய், விரைவில் வயதாவது போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது.
ரோமங்களை நீக்கி சுத்தம் செய்த முடவாட்டுக்கால் கிழங்கை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, லவங்கப்பட்டை, மிளகு, சீரகம் சேர்த்து, வேகவைத்து ஒரு சூப் போல செய்தால், உண்மையான ஆட்டுக்கால் சூப் தோற்றுவிடும் அளவுக்கு சுவையாக இருப்பதுடன் மேலே சொன்ன மருத்துவ பலன்களையும் இது நமக்கு தருகிறது.
Super. Works well for kidney cleaning.
© Vivethan. All Rights Reserved. Powered by Shukra Biz Services